Saturday, March 30, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 4

2010 ஆம் ஆண்டு 

28.09.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் படி தீர்ப்பு வழங்கியது.

29.09.2010 அன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு படி ஆலை மூட சொல்லி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்


இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று வைகோ கேவியட் (Caveat) மனுவை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 30.09.2010 அன்று
தாக்கல் செய்தார்.


13.12.2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வைகோ, தானே நேரில் ஆஜராகி வாதாடினார். இதே வழக்கில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் ரிட் மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆவணங்களைச் சரிபார்க்க வழக்கில் வாய்தா கோரப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் வைகோவுக்கு அனுப்பியிருந்த பதில் விளக்க மனுவின்மீது தாம் புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும் என்று வைகோ கோரினார்.

அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வைகோவுக்குப் புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். வழக்கு, அடுத்தகட்ட விசாரணைக்காக  ஜனவரி மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு 

25.02.2011 அன்று, உச்சநீதிமன்றம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக்கூடம் நீரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆய்வு நடத்தி, எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின்போது, (வைகோ )எதிர்மனுதாரர்களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

40 நாள்கள் கழித்தே நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி அவர்கள் தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல், 6,7,8 யில்  தேதிகளில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் வைகோவும் கலந்து கொண்டார்.

இந்த ஆய்வின் பொது ,ஆலை வளாகத்துக்குள் மண், நீர், மாதிரிகளை சோதனைக்கு இம்முறை எடுப்பது இல்லை என்று நீரி நிறுவனம் கூறியது. 

உடனே வைகோ பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் பேரில், மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆயினும், வைகோ தரப்பில் மாதிரிகள் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மண்டலத்தில்ஏற்படும் மாசு, நச்சுத்தன்மையைக் கண்டு அறியத் தேவையான கருவிகளை, நீரி ஆய்வுக்குழு கொண்டு வரவில்லை.

மீண்டும் ஆய்வு ஏப்ரல் 19 ஆம் நாள் தொடங்கியது. இதில், வைகோ , சுற்றுச்சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மதிமுக மாவட்டக் கழகச் செயலாளர் ஜோயல்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டானர்.

25 மீட்டர் சுற்றளவுக்கு, ஆலையில் அடர்ந்த பசுமைச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80,000 மரங்கள் நடப்பட்டு இருப்பதாக, உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது.

உயர்நீதிமன்றம் ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், வெளி இடங்களில் இருந்து, குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்ட, ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வைகோவிற்கு தெரிவித்து இருந்தனர்.

அதனால், பல இடங்களில் மரங்கள் பட்டுப்போய் நிற்பதும், ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்தவே, ஸ்டெர்லைட் முயற்சிக்கிறது என்பதையும், நீரி ஆய்வுக்குழுவிடம் வைகோ எடுத்துரைத்தார்.

பல இடங்களில், புதிதாக ஊன்றப்பட்ட வேப்ப மரங்கள், இலைகளே இல்லாமல் காய்ந்து கிடப்பதை வைகோ சுட்டிக்காட்டியபோது, இது இலையுதிர் காலம் என்றும், இனிமேல்தான் இலைகள் துளிர்க்கும் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்தபோது, மற்ற இடங்களில் எல்லாம் வேப்ப மரங்கள் இலைகள் இல்லாமல் வெறும் குச்சுகளாகவா நிற்கின்றன? என்று வைகோ மறுத்துக் கூறி, நீரி ஆய்வுக்குழு அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஸ்டெர்லைட் வளாகத்தில், ஆலையின் ஒரு பகுதியில் ஓரளவு மரங்கள் நடப்பட்டு இருந்தாலும், மற்ற இடங்களில் காங்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டும், பசுமைச் சூழலுக்கு வாய்ப்பே இல்லாமல் ஆக்கப்பட்டும் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் வைகோ.

காற்று மண்டலத்தில், மாசும், தூசும், நச்சுப்புகையும் எந்த அளவுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் கலக்கிறது என்பதைக் கண்டு அறிய, ஆய்வுக்குழு வினர் ஆங்காங்கு அந்த ஆய்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள். எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறையும், 24 மணி நேரத்துக்கு ஒரு முறையும், அந்த ஆய்வுக்கருவியின் பதிவுகள் குறிக்கப்படும் என்றனர்.

ஏப்ரல் 20, 21 இரண்டு நாள்களும், நல்ல மழை பெய்ததால், காற்றில் படரும், தூசும், மாசும், சரியாகப் பதிவு செய்ய இயலாமல் போக வாய்ப்பு ஆயிற்று. இடையிடையே ஏற்பட்ட மின் தடையும், ஆய்வுக்குக் குந்தகம் ஆயிற்று.

ஆலைக்கு வெளியில் மீளவிட்டானில், காற்று மண்டலத்தில்,ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் பாதிப்பைக் கண்டு அறிய, ஆய்வுக் கருவியை, கூட்டுறவு வேளாண்மைச் சங்கக் கட்டடத்தில் அமைத்தபோது, அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, கடந்த ஒரு வார காலமாக, ஆலையில் உற்பத்தியை மிகவும் குறைத்து விட்டார்கள் என்றும், ஆலைப்புகை, பத்தில் ஒரு மடங்குதான் தற்போது வருவதாகவும், ஆலை முழுவதும் இயங்கும் நாள்களில், காற்றில் கலந்து வரும் புகையால், தங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், தாங்கள் அங்கே குடி இருப்பதற்கே அவதிப்படுவதாகவும் கூறியதை, வைகோ ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் நந்தியிடம் தெரிவிக்கிறார்.

ஆலையில் உற்பத்தி மிகவும் குறைக்கப்பட்டு விட்டது. பிப்ரவரி 25 முதல் மார்ச் 25 வரை, ஆலையில் ஒவ்வொரு நாளிலும் உற்பத்திக் கணக்கை, நீரி குழுவினர் ஆலை நிர்வாகத்திடம் ஆவணங்களின் ஆதாரங்களோடு பெற வேண்டும் என்று வற்புறுத்து கிறார் வைகோ.

தாமிர உருக்கு உற்பத்தி செய்வதற்கு, பல்வேறு நச்சு உலோகங்களும், ஆர்சனிக், யுரேனியம் உள்ளிட்டவையும் கலந்து உள்ள தாமிர அடர்த்திப் பொருளை, ஆஸ்திரேலியாவில் இருந்து, பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆலைக்குக் கொண்டு வருகிறது.

ஆனால், நீரி குழுவினர் ஆய்வு செய்த நாள்களையொட்டி, ஒரு வார காலம் ஆலைக்குள் இந்தத் தாமிர அடர்த்தி கொண்டு வரப்படவில்லை என்பதையும் நீரி குழுவினரிடம் தெரிவிக்கிறார் வைகோ.

ஏப்ரல் 21 ஆம் தேதி , நச்சு உலோகங்களாலும், ஆர்சனிக், யுரேனியத்தாலும் மற்றும் ஆலையின் இயக்கத்தாலும் ஏற்படும் கதிர் இயக்கத்தைச் சோதனை செய்ய, ரேடான் ஆய்வுக் கருவிகளுடன், மும்பை நகரில் இருந்து ஆய்வாளர்கள் இருவர் வந்தனர் .

 எட்டு இடங்களில் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு இடத்திலும், ஒரு மணி நேரம் கருவி இயக்கப்பட்டது.

ஆலையின் திடக்கழிவுகள் குவிக்கப்படும் இடங்களிலும், ஆய்வு மேற் கொள்ளப் பட்டது. ஆலையில் இருந்து நச்சுத்தன்மை மிக்க கழிவு நீரையோ, கழிவுப்பொருள்களையோ, வெளியில் கொண்டு போய் கொட்டப்படக்கூடாது என்பது, ஆலை கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனை ஆகும்.

ஆனால், அனுமதி பெறாமலேயே விரிவாக்க வேலைகளில் ஈடுபட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலை, வெளியேற்றப்படும் கழிவுகளைக் கொண்டு போய், விரிவாக்கப் பகுதியில், பெரிய அளவில் 18 குழிகளைத் தோண்டி, அதில், கழிவு நீரைக் கொண்டு போய் கொட்டி வைத்து இருப்பதை, நீரி ஆய்வாளர் டாக்டர் நந்தியிடம் வைகோ எடுத்துக் கூறி, அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கிருந்தும், நீரின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.

ஏற்கனவே ஆலைக்கு வெளிப்புறத்தில் வைகோ  சேகரித்த தண்ணீர், சேறு, மண் மாதிரிகளை, தமிழகத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்துக்கு நிபுணர் நித்யானந்த் ஜெயராமன் மூலம் அனுப்பி வைக்கிறார் .

ஏற்கனவே இம்மாதிரி எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள், அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மைக் செர்னெயிக் என்பவருக்கு அனுப்பப்பட்டு, அவர் ஸ்டெர்லைட் ஆலையிலும் சுற்று வட்டாரத்திலும் நடத்தப்பட்ட தண்ணீர், மண் சோதனைகளின் முடிவுகளை, தான் ஆய்வு செய்ததாகவும், அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும், ஆடு, மாடுகள் மற்றும் உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும், தான் கையெழுத்து இட்டு அறிக்கையாகவே தந்து உள்ளார். அதனையும், வைகோ தன்னோடைய பிரமாண வாக்குமூலத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார்.

No comments:

Post a Comment