Wednesday, February 29, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 4

மின் வெட்டுக்குக் கண்டனம்;

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
உண்மையில், தமிழ்நாடு மின்சார வாரியம், பலத்த நிர்வாகச் சீர்கேட்டுக்கு உள்ளாகி இருக்கின்றது.

தமிழகத்தில் மின் பகிர்மானத்தின்போது ஏற்படுகின்ற மின் இழப்பு 18 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.மின் திருட்டு வெகுவாக நடைபெறுகிறது;
மின்வாரியத்துக்கான பொருள்களை வாங்குவதில் பெருமளவில் ஊழல் தாண்டவமாடுகிறது;



தரமற்ற கருவிகளை வாங்கிக் குவிக்கின்றனர்;மின்வாரியத்துக்காக அயல்நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், பெருமளவில் ஊழல் நடைபெற்று உள்ளது;

அதிகாரிகள் பணி இடமாற்றத்துக்கு, இலட்சக்கணக்கில் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மின்வாரியத்தின் உயர் அதிகாரிகளே லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.

காற்றாடி ஆலைகளில் பெறப்படும் மின்சாரத்தை முழுமையாக வாங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை.

வேறு மாநிலங்களில் கூடுதல் விலைக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில், 24 மணி நேரமும் தடையின்றிக் கொடுத்து வருகின்றார்கள். ஆனால், நாட்டுக்கே உணவு விளைவித்துத் தருகின்ற விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரத்து செய்யப் போவதாகச் செய்திகள் வருகின்றன.

மின்வாரியக் குறைபாடுகளை எல்லாம் களைந்தாலே, மின்சார வாரியத்தை லாபகரமாக நடத்திட முடியும்.
அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின்துறையில் உள்ள குறைகளைச் சரி செய்து, முழுமையாக மின்சாரம் வழங்குவோம் என்று அறிவித்தார்கள். ஆனால், இன்று நிலைமையோ, முன்பு இருந்ததைவிடவும் சீர்கெட்டு உள்ளது.

8 மணி நேரம் மின்வெட்டு என்று அறிவித்து இருக்கின்றார்கள். கிராமப்புறங்களில், 8 முதல் 10 மணி நேரம் மின்சாரம் கிடையாது. மின்சாரம் எப்போது வரும்? எப்போது போகும்? என்பதே யாருக்கும் தெரியாது. இதனால், விவசாயமும், சிறு, குறு தொழில்களும், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை இருளில் தள்ளி இருக்கின்ற மின்வெட்டுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வாலும், பால் விலை மற்றும் பேருந்துக் கட்டண உயர்வாலும், தாங்க முடியாத அவலத்துக்கு ஆளாகி உள்ள அடித்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும் மேலும் பாதிக்கக்கூடிய வகையில், எக்காரணத்தை முன்னிட்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment