Tuesday, February 21, 2012

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது!

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்த இயக்கமாக இந்திய அரசு அறிவித்து, அதனைத் தீர்ப்பாயமும் உறுதி செய்ததை எதிர்த்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 2010 டிசம்பர் 8-இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனு 2011 பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது, இந்த முயற்சியில் கிடைத்த முதல் வெற்றியாகும்.



இந்தியாவில் இதுவரை தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்தின் மீதான தடையையும் ரத்து செய்யக் கோரும் ரிட் மனு, எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரணைக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பிப்ரவரி 20-ஆம் நாளான இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் மாண்புமிகு திலிப்பி தர்மாராவ், மாண்புமிகு கிருபாகரன் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இந்த ரிட் மனுவை எதிர்த்து மத்திய அரசு விடுதலைப் புலிகளைத் தடை செய்ததை ஆதரித்து வலியுறுத்தி பதிலுரை தாக்கல் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் மத்திய அரசை வழிமொழிந்து இன்று பதிலுரையைத் தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இன்று நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் வைகோ அவர்கள் இந்த விவரத்தைக் கூறியதோடு மேலும் பின்வருமாறு தெரிவித்தார்:

ஓராண்டுக்கு முன்பு இந்த பிப்ரவரி 20-ஆம் நாள் தமிழர்கள் உள்ளத்தில் துன்பமும் துயரமும் தாக்கிய நாளாகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் - தமிழ்த் தேசிய இனத்தின் நிகரற்ற தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் பார்வதி அம்மையார் மறைந்த துயர நாளாகும். அன்னை பார்வதி அம்மையார் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு முறையான விசா அனுமதி பெற்று வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் விமானத்தை விட்டே கீழே இறங்க விடாமல் ஈவிரக்கமின்றி, மனிதாபிமானமின்றி திருப்பி அனுப்பிய கொடுமைக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும்தான் காரணம் ஆவார்கள்.

அதன்பின்னர் அன்னை பார்வதி அம்மையார் யாழ்ப்பாணத்திற்கே சென்று சிறுகச் சிறுக உடல் நைந்து, உயிர் நலிந்து தமிழர்களைத் துயரக் கடலில் ஆழ்த்தி மறைந்தார்கள். அவர்களது இறுதிச் சடங்குகளைக் கூட சிங்களக் கொடியோர் நடத்த அனுமதிக்கவில்லை. மூன்று தெரு நாய்களைச் சுட்டுக் கொன்று அந்த நாய்களின் உடல்களை அன்னை பார்வதி அம்மையாரின் சிதையில் போட்ட காட்டுமிராண்டிச் செயல் உலகத்தில் இதுவரை எங்கும் நடைபெறாத ஒன்றாகும்.

சிங்கள அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எதிரே மறியல் போரில் ஈடுபட்ட நானும், அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை இராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டோம்.

ஈழத் தமிழ் இனத்தை அழிக்கப் படுகொலைகள் நடத்திய சிங்கள அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் கூட இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.

2009-இல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கொலைகார சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு, இப்பொழுது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு பத்திரிகையாளர்களிடம் வைகோ அவர்கள் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுடன் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் மற்றும் வழக்கறிஞர்கள் எம்.டி. அருணன், ஆர். பிரியகுமார், அரசு கணேசன், ப. சுப்பிரமணி, செந்தில் செல்வன், எம். சிதம்பரம், அ. இராஜேந்திரன், தென்காசி சங்கரன், எம். ராஜா, இராமகிருஷ்ணன், பூவனலிங்கம், ஜெயகுமாரி விசு, சதீஷ்குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

‘தாயகம்’                                                                                               தலைமைக் கழகம்
சென்னை-8                                                                                           மறுமலர்ச்சி தி.மு.க.
20.02.2012

No comments:

Post a Comment