Tuesday, February 21, 2012

மக்களிடம் செல்வோம்; உறுதியாக வெல்வோம்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ம.தி.மு.க. வேட்பாளர் 
டாக்டர் சதன் திருமலைக்குமார்!

மக்களிடம் செல்வோம்;

உறுதியாக வெல்வோம்!

தாயகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வைகோ!

எங்களுடைய அழைப்பின் பேரில் இங்கே வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.



வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்கள் மொத்தம் எட்டுப் பேர். அவர்களை, இன்றைக்குத் தாயகத்தில் நேர்காணல் மூலமாகச் சந்தித்தோம். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நேர்காணல் மூலம் அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு அறிந்தோம்.

அதன்பின்னர், ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானித்தபடி, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.,பி.எஸ்., அவர்களைத் தேர்ந்து எடுத்து இருக்கிறோம். அவர், பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.



வருகின்ற 24 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, டாக்டர் சதன் திருமலைக் குமார், வேட்புமனு தாக்கல் செய்வார். 25 ஆம் தேதி சனிக்கிழமை, சங்கரன் கோவிலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பிரச்சாரக் கூட்டம், கழக வேட்பாளரை ஆதரித்து நடைபெற இருக்கிறது.

இந்தத் தேர்தல் களத்தில் வெல்வோம் என்ற முழு நம்பிக்கையோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் களத்துக்குச் செல்லுகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளால், நடுத்தர, சாமான்ய மக்கள் தலையிலே பெரும் பாரம் சுமத்தப்பட்டு அவர்கள் அல்லல்படுகின்ற சூழலில், நான் என்னதான் கட்டணத்தை உயர்த்தினாலும், விலையை உயர்த்தினாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று முதல் அமைச்சர் அறிவித்ததை, ஜனநாயகத்தை மதிக்கின்ற கருத்தாக மக்கள் கருதவில்லை.

அல்லல்படுகின்ற அந்த மக்களின் துன்பத்தைப் பொருட்படுத்தாது, முதல் அமைச்சர் துச்சமாகப் பேசியதாகவே மக்கள் கருதுகிறார்கள்.

எனவே, இந்தத் தேர்தல் களத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வாக்காளர்களிடையே முன்வைப்பது, தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், தமிழ்நாட்டின் நலனைக் காக்கவும், தமிழர் உரிமை காக்கவும், இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான கொடிய ராஜபக்சேவின் சிங்கள அரசைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தவும், முல்லைப்பெரியாறு பிரச்சினையிலும், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகம் இழைத்து வருகின்ற, ஈழத்தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகத்துக்குச் சரியான பாடம் கற்பிக்கவும், இந்தத் தேர்தல் களத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என மக்கள் மன்றத்தில் கேட்போம்.

சட்டமன்றத்தில் எங்கள் கருத்தை எதிரொலிப்பதற்கு, ஒரு பிரதிநிதி இல்லை.

தமிழ்நாட்டு மக்களுக்காகப் போராடுகிறோம்; பாடுபடுகிறோம். எனவே, சட்டமன்றத்தில் எங்கள் கருத்தைச் சொல்ல, எங்கள் தரப்பை எடுத்து உரைக்க, எங்களுக்கு ஒரு பிரநிதியைத் தாருங்கள் என்று, சங்கரன்கோவில் தொகுதி வாக்காளர்களைச் சந்தித்துக் கேட்க இருக்கிறோம்.

இந்த இடைத்தேர்தல் முடிவு, ஆட்சியைப் பாதிக்கப் போவது இல்லை. ஆனால், இந்தத் தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்குக் கிடைக்கின்ற வெற்றி, ஆட்சியாளர்களுடைய போக்குக்குக் கடிவாளம் இடுவதாக, ஒரு எச்சரிக்கை மணி அடிக்கின்ற விதத்தில் அமையும்.

மாட்டுக்கு மூக்கணாங்கயிறு; குதிரைக்குக் கடிவாளம்; ஓடும் வாகனத்துக்கு பிரேக் என்பதைப்போல,

இடிப்பாரை இலா ஏமரா மன்னன்

கெடுப்பாரி லானுங் கெடும்

என்பதற்கொப்ப, இந்த அரசுக்கு மக்கள் கருத்தைச் சுட்டிக்காட்டி, நீங்கள் தவறான பாதையில் தொடர்ந்து செல்வீர்களானால், தான்தோன்றித்தனமாகச் செயல்படுவீர்களானால் துhக்கி எறியப்படுவீர்கள் என ஒரு அபாய அறிவிப்பாகத்தான் மக்கள் இந்தத் தீர்ப்பைத் தந்து இருக்கின்றார்கள் என்பதை உணர வைப்பதற்கு, ஜனநாயகத்தை மேலும் பொலிவுடையதாக்குவதற்கு, சங்கரன்கோவில் தொகுதி மக்களுடைய தீர்ப்பு, தமிழக அரசியலில் ஒரு விடியலுக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையோடு, நாங்கள் வாக்காளர்களைச் சந்திப்போம்.

ஊழல் அற்ற அரசியலை வென்றெடுப்பதற்கு, நேர்மையான அரசியலை வென்றெடுப்பதற்கு, இலஞ்ச இலாவண்யம் இல்லாத அரசியல் தமிழகத்திலே மலர்வதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்க இருக்கின்றோம்.
உங்களின் சின்னம்
பம்பரம் 

ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற தி.மு.கழக அரசு, தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காவு கொடுத்தது; ஈழத்தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான துரோகத்தை இழைத்த மத்திய அரசில் இன்றுவரையிலும் பங்கு ஏற்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களைத் தோற்கடித்து விட்டார்கள்.

அந்த அரசு, ஒவ்வொரு பிரச்சினையிலும் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

எனவே, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாற்றாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் மக்களைச் சந்திக்கச் செல்லுகிறோம்.

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை; நபர்கள்தான் மாறி இருக்கிறார்கள். மணல் கொள்ளை முன்பை விட பன்மடங்கு அதிகமாகி இருக்கிறது.

26 அமைச்சர்கள் உள்ளிட்ட 34 பேர் கொண்ட குழுவை முதல் அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

ஒவ்வொரு அமைச்சரும் இரண்டு கோடி தருகிறோம் மூன்று கோடி தருகிறோம் என்று பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்களே, மக்களிடம் போய் வசூல் செய்தார்களா?

இவைதான் மக்களிடையே எழுப்பப்படுகின்ற கேள்விகள்.

வீடுகளில் இருக்கின்ற தாய்மார்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கின்ற அளவுக்குப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இப்படி சட்டம் ஒழுங்கு சீர்கெடுகின்ற அளவுக்கு மதுவின் கொடுமை முக்கியக் காரணமாக இருக்கின்றது. இதற்கு மேலும் எலைட் பார் திறக்கிறோம்; சூப்பர் டாஸ்மாக் திறக்கிறோம் என்று அறிவித்து இருக்கின்ற, மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாத இந்த அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற தேர்தலாக இந்தத் தேர்தலில் மக்கள் பம்பரம் சின்னத்துக்கு வாக்கு அளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில், ஏழு தலித் உயிர்கள் பறிக்கப்பட்டன. எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத, அக்கிரமமான அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவல்துறையினரை, இன்றுவரையிலும் ஏன் பணி இடைநீக்கம் செய்யவில்லை?

இந்தக் கேள்விகள் எல்லாம், மக்கள் மன்றத்தில், வாக்காளர்களிடம் எடுத்து வைக்கப்படும்.

டாக்டர் சதன் திருமலைக்குமார்  
மதுவின் பிடியிலும், இலவசங்களின் பிடியிலும் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கின்ற மக்களைப் பாதுகாக்க, தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்ற, தன்னலம் அற்று அண்ணாவின் கொள்கை வழியில் நடைபோடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், முழுத் தகுதியோடு மக்களைச் சந்திக்கிறது. உறுதியாக வெற்றி பெறுவோம்.

தமிழகத்தின் அரசியலில் ஒரு மகத்தான திருப்பத்துக்கான நுழைவாயிலாக, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்; டாக்டர் சதன் திருமலைக்குமார் அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுத்து அனுப்பி வைப்பார்கள்.

மக்கள் சக்தியை நம்பி, இந்தக் களத்துக்கு நாங்கள் செல்லுகிறோம்!.


‘தாயகம்’                                                                         தலைமைக் கழகம்
சென்னை-8                                                                    மறுமலர்ச்சி தி.மு.க.
19.02.2012

3 comments:

  1. டாக்டர் . சதன் திருமலைக்குமார் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அண்ணன் சதன் திருமலைக்குமாரின் வெற்றி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புது அத்தியாயத்தை புரட்டும். நடத்தி காட்டுவோம் நாம்.

    ReplyDelete