Wednesday, February 22, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 1

முல்லைப்பெரியாறு: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!


தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, 1895ம் ஆண்டு கட்டப்பட்டு, சென்னை மாகாண அரசுக்கும் திருவிதாங்கூர் கொச்சி அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, 999 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி உரிமை உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது என்று பொய்யான காரணம் காட்டி, கேரள அரசு நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைத்துவிட்டது. இதனால் தென் மாவட்டங்களில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயிரிட முடியாமல் பேரிழப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.



மத்திய தொழில்நுட்ப வல்லுனர் குழு, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை வலுவாக இருப்பதாகச் சான்று அளித்தது. அதன் அடிப்படையில், 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவைக் கேரள அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளைப் பராமரிக்கவும், உடைக்கவும்கூட கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் இதில் தலையிட முடியாது என்றும், கேரளச் சட்டமன்றத்தில் 2006 மார்ச் 17ல் அக்கிரமமான சட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நிறைவேற்றியது. அத்துடன், முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டுப் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வருகிறது.

உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், அந்த முயற்சிகளைத் தீவிரமாக்கி உள்ளது.

பென்னி குயிக் கட்டிய, தமிழகத்துக்கு வாழ்வாதரமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சிப்பது, இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் செயல் ஆகும்.

கேரள அரசு அக்கிரமமாக நிறைவேற்றிய சட்டத்தை ரத்துச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் கடமையில் தவறியதோடு மட்டும் அல்லாமல், மேலும் அநீதி இழைக்கின்றவிதத்தில், கேரளத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அணை பாதுகாப்பு மசோதாவை, நாடாளுமன்றத்தில் சட்டமாக ஆக்கிடவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

தமிழக அரசு கடுமையாக எதிர்த்ததன் விளைவாக, தற்காலிகமாக அந்த முயற்சியை நிறுத்தி வைத்து இருந்தாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றக் கூடும் என்ற ஆபத்து நீங்காமலேயே உள்ளது.

தற்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள அதிகாரக் குழு, ஏற்கனவே ஆய்வை நடத்தி முடித்து விட்டது. இக்குழு, வெகு விரைவில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில், கால ரீதியாக நீர் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவியை (Real Time Monitoring for Water ) நிறுவ கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இது, அணையின் பாதுகாப்பு சந்தேகத்துக்கு இடமானது; அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்ற அச்சத்தையும், பீதியையும் பரப்புகின்ற மற்றொரு நடவடிக்கையே. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கேரளம் மேற்கொண்டு உள்ள இத்தகைய நடவடிக்கை, நீதியியல் நெறிமுறைக்குப் புறம்பானதாகும்.

இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு தமிழகத்துக்கு விரோதமாகவே தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் அது சார்ந்த அனைத்துக் கட்டுமானங்களும், தமிழக அரசுக்கே முழு உடைமை ஆகும். தமிழக அரசே அணையைப் பராமரித்து வருகிறது. அதில், காலரீதியாக நீர் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவியை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன், முல்லைப்பெரியாறு அணiயில் நிறுவ கேரள அரசு முற்பட்டுள்ளது, ஒருதலைப்பட்சமானது. இதுகுறித்து, தமிழக அரசுடன், கேரள அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. தமிழக அரசின் அனுமதியையும் பெறவில்லை.

கேரள அரசின் இத்தகைய நடவடிக்கை, கூட்டு ஆட்சித் தத்துவத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாகும். எனவே, இந்தக் கருவியை நிறுவ, கேரள அரசுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்தால், அதில் இருந்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விலக வேண்டும். ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை எனில், இனிமேல் இவ்வாறு ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளக்கூடாது.

காலரீதியாக நீர் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவியை நிறுவக்கூடாது என்று கேரள அரசுக்கும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணைக்கு இம்மியும் சேதாரம் ஏற்படாமல் பாதுகாப்பதும், 152 அடி வரையிலும் நீர்மட்டத்தை உயர்த்தி, தண்ணீரைத் தமிழகம் பாசனத்துக்குப் பெறுவதும்தான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், கேரளத்தின் புதிய அணை கட்டுகிற முயற்சியைத் தடுப்பதற்கும், 2006 மார்ச் மாதத்தில் கேரளச் சட்டமன்றம் நிறைவேற்றிய நதிநீர் குறித்த சட்டத்தை ரத்துச் செய்வதற்கும், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

அணைப் பாதுகாப்பு மசோதாவைச் சட்டமாக்கும் முயற்சியை, மத்திய அரசு முற்றிலும் கைவிட வேண்டும்; அதற்கு மாறாக நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடைவது தவிர்க்க முடியாததாகி விடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

No comments:

Post a Comment