Wednesday, February 22, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அந்த வழக்கை அங்கிருந்து மாற்றுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பின்னணியில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (22.2.2012) உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் சிங்வி, நீதியரசர் முகோபாத்தியாயா அமர்வில் வந்தது.

மாற்றுதல் செய்யக் கோரிய மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மூன்று பேர் மரண தண்டனை வழக்கையும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு முறை வேறு அமர்வுகளிலே இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இதே நீதிமன்றத்தில் அனுப்பப்பட்டுவிட்டது; அதனால் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.
புல்லர் வழக்கு விசாரணை நடைபெறும். அதன்பிறகு முறையாக மற்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.



மூன்று தமிழர்கள் மரண தண்டனை குறித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி ஆஜரானார்.

புல்லர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இதில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் அமிக்கர்ஸ் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள ஜெத்மலானி அவர்கள் இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளின் முழுமையான விபரங்களை மத்திய அரசு வழக்கறிஞர் தனக்கு தரவில்லை என்று தெரிவித்தார்.

நீதிபதி சிங்வி அவர்கள் இதற்கு மத்திய அரசு வழக்கறிஞரிடம் நீங்கள் ஏன் தேவையான முழுத் தகவல்களை தரவில்லை, வெறும் தேதிகளைக் குறிப்பிட்டு தந்துள்ள தகவலால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மரண தண்டனை வழக்குகளின் விபரங்களை அந்தந்த மாநில அரசுகளின் உள்துறைச் செயலாளர்கள் மூன்று நாட்களுக்குள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தபால் மூலமோ, தொலைபேசி மூலமோ, ஆள் அனுப்பியோ சேர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் அதன் விளைவுகளுக்கு மாநில அரசுகளின் உள்துறைச் செயலாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கடுமையாகக் கூறியதோடு, புல்லர் வழக்கு மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும்,

அன்றைக்கு மத்திய அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்கக்கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறி வழக்கை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இன்றைய விசாரணையின் போது, வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி அவர்களோடு, வழக்கறிஞர்கள் லதா கிருஷ்ணமூர்த்தி, ஜெயந்த் முத்துராஜ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர்கள் ஜி. தேவதாஸ், பிரபு, பாரிவேந்தன் உடன் இருந்தனர்.


‘தாயகம்’                                                                        தலைமைக் கழகம்
சென்னை-8                                                                மறுமலர்ச்சி தி.மு.க.

வழக்கறிஞர் திரு .ராம் ஜெத் மலானி , மதிமுக  பொதுச் செயலாளர்  வைகோ மற்றும் மதிமுக வழக்கறிஞர்கள்  

No comments:

Post a Comment