Sunday, February 26, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 3

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வு!





2011 டிசம்பர் மாதம் 30 ஆம் நாள், வங்கக் கடலில் உருவான ‘தானே’ புயல், கடலூர் மாவட்டத்தை முற்றிலும் புரட்டிப்போட்டு விட்டது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலப் பகுதிகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த சுமார் 2.38 இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அழிந்துவிட்டன. 75 ஆயிரம் ஏக்கர் கரும்பு, வாழை, 85 ஆயிரம் ஏக்கர் முந்திரி, 25 ஆயிரம் ஏக்கர் பலா, 5 ஆயிரம் ஏக்கர் தென்னை, 10 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி, 750 ஏக்கர் கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. தோட்டப்பயிர்களும் அழிந்து விட்டன. இரண்டரை இலட்சம் வீடுகளும் குடிசைகளும் நொறுங்கி மண்மேடுகளாகி விட்டன. மீனவர்களின் மீன்பிடிப் படகுகள், வலைகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன.

பேரிடி தாக்கி உள்ள விவசாயிகளும், மீனவர்களும் இந்தப் பாதிப்புகளில் இருந்து உடனடியாக மீள இயலாத நிலையில் உள்ளனர்.


புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்த திரு .வைகோ

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை நேரில் பார்த்து, கண்ணீரில் பரிதவிக்கும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், கழகத்தின் சார்பில், ரூபாய் பத்து இலட்சத்தை, தமிழக அரசின் புயல் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம்.

முந்திரிக் கன்றை நட்டு, பிள்ளையைப் போல் வளர்த்து, விழி காக்கும் இமையெனக் காத்து விளைந்த முந்திரிகளின் அறுவடையால், வாழ்ந்து வரும் பெருமக்களே, இப்பகுதி வாழ் மக்கள். இன்று அவர்கள் உலகமே இருண்டு விட்டது. முறிந்து நொறுங்கிச் சிதறிக் கிடக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு, தூரும், வேரும் கொண்ட அடிமரத்தைத் தோண்டி எடுத்து அகற்றுவது, இமாலய வேலை.

ஒரு ஏக்கரில் நாசமான பகுதியைச் சீர்படுத்தவே, இன்றைய நிலைமையில் 25,000 ரூபாய் செலவு ஆகும். எனவே, விவசாயிகளால் இதைச் செய்ய இயலாது. எனவே, அரசாங்கமே, ஒடிந்து கிடக்கும் முந்திரி, பலா மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

அடுத்து இங்கே வேறு பயிர் செய்ய முடியாது என்பதால், மீண்டும் முந்திரி, பலா மரக் கன்றுகளை நடுவதற்கும், வளர்ப்பதற்கும், ஏக்கருக்கு 25,000 ரூபாய், விவசாயிக்கு அரசு வழங்க வேண்டும். தென்னை விவசாயிக்கு, மரம் ஒன்றுக்கு 1000 ரூபாய்; நெற்பயிர் விவசாயிகளுக்கும், நிலக்கடலை உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபாய் தர வேண்டும்.

கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும், விவசாயிகளுக்கும் மீனவர்களுக்குமான மறுவாழ்வுப் பணிகள், பாரபட்சம் எதுவும் இன்றி விரைவாகக் கிடைத்திடவும், பயிர்க் காப்பீட்டுத் தொகை சரியாகக் கிடைத்திடவும் அரசு ஆவன செய்ய வேண்டும். விவசாயிகள் புதிய மரக்கன்றுகள் நடவும், பம்பு செட்டுகள் வாங்கவும் உதவிட வேண்டும். மீனவர்களுக்கு புதிய வலைகள், மீன்பிடி சாதனங்களை வழங்கிட வேண்டும்.

பெரும் நாசத்துககு ஆளாகித் துன்பத்தில் தவிக்கின்ற கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நிதியை, மத்திய அரசு வழங்காமல், கண்துடைப்பு நடவடிக்கையாக சொற்பத் தொகையை வழங்கியதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழக அரசு கோரியுள்ள புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment