Saturday, February 25, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 2

நதிநீர் நாட்டு உடைமை!



மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிநீரை நாட்டு உடைமை ஆக்கி, தேசிய நதிகளாக அறிவிப்பதற்கு இந்திய அரசு சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீபகற்ப நதிகளான தென்னக நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.



அந்த மசோதா, 2000 மே 5 இல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 11 அன்றும் விவாதம் தொடர்ந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த விவாதத்தில் பங்கு ஏற்று, வைகோவின் மசோதாவை வரவேற்றனர்.

மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர், ‘எதிர்காலத்தில், இந்தக் கருத்துகளை உள்ளடக்கி சட்டத் திருத்தம் கொண்டு வருவோம்’ என உறுதி அளித்தார்.

2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, அதன் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பதை ஒரு திட்டமாக இடம் பெறச் செய்ததும், நதிகளின் இணைப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டதும், பல்லடம், வேடசந்தூரில் விவசாய மாநாடுகளை நடத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றியதும், கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி அவர்களைச் சந்தித்து முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளை விவாதித்ததும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் தொலைநோக்குச் செயல்பாடுகள் ஆகும்.

தற்போது முல்லைப்பெரியாறு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உரிமைகளை, நலன்களைக் காக்கவும், இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், மத்திய அரசு, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், மத்திய அரசின் அதிகாரப்பட்டியல் தரப்பட்டு உள்ளது.

அதில், 56 ஆவது பதிவாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிகாரம்,

மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளையும், நதிநீர்ப் பள்ளத்தாக்குகளையும் முறைப்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதற்கு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டத்தின்படி, எந்த அளவுக்கு மக்கள் நலனுக்கு உகந்ததாக இருக்குமோ, அந்த அளவுக்கு முறைப்படுத்தவும், வளர்ச்சி ஏற்படுத்தவும், மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

மாநில அரசுப் பட்டியலில் 17 ஆவது பதிவின்படி, தண்ணீர், நீர் வழங்குதல், பாசனம், கால்வாய்கள், வடிகால்கள், அணைக்கரைகள், நீர்த்தேக்கங்கள், நீர்விசை குறித்த அனைத்தும், மத்திய அரசுப் பட்டியலின் 56 ஆவது பதிவின் வரைமுறைக்குக் கட்டுப்பட்டதாகும் என்று, அரசியல் சட்டம் வரையறுக்கிறது.

அரசியல் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்படி, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகள் குறித்துச் சட்டம் இயற்றுவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், மத்திய அரசுக்குத் திட்டவட்டமான அதிகாரம் இருக்கின்றது.

மத்திய அரசின் அதிகாரக் குவியல் பரவலாக்கப்பட வேண்டும் என்றும்,

மத்திய அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல் தவிர்த்த எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும், மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும்,

மாநில சுயாட்சிக் கொள்கையில் உறுதியான நிலைப்பாடு கொண்டு உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,

மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகள் குறித்த பிரச்சினையில், மாநில உரிமை காக்கவும், இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கவும் கருதியே, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகளை நாட்டு உடைமை ஆக்கும் சட்டத்தை, அரசியல் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழுவின் வாயிலாக மீண்டும் வலியுறுத்துகிறது.


No comments:

Post a Comment