Sunday, February 10, 2013

ஐ.நா. மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் -வைகோ

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் இன படுகொலையை செய்த இலங்கை அதிபர் ராஜபச்சேவை காங்கிரஸ் அரசு அவரை சந்தோஷபடுத்தி அழைத்து இருக்கிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

இதனை எதிர்த்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பதியில் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்களை கைது செய்தது. இலங்கையில் இந்துக்கோவில்களை இடித்துவிட்டு பவுத்த நாடாக இலங்கை மாற்றிவருகிறது. இந்தியாவிற்கு ராஜபக்சேவை வரவழைத்து ராஜ மரியாதை செய்வது 7 கோடி தமிழர்களின் நெற்றியில் எட்டி உதைப்பது போன்று உள்ளது. இந்திய அரசு வினையை விதைத்துள்ளது. அதனுடைய பலன் இந்திய ஒருமைபாட்டுக்கு கேடு விளைவிக்கப்போகிறது.



நடந்த படுகொலைக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில் தமிழ் இனபடுகொலை செய்தவரை இந்தியாவுக்கு வரவைத்து புத்தகையாவுக்கும், திருப்பதிக்கும் சாமி கும்பிட்டு போனால் உலக நாடுகள் இலங்கை பிரச்சனை சம்பந்தமாக ஏதுவும் இந்தியாவில் இல்லை என கூறி ராஜபச்சேவை காப்பாற்றிவிடலாம் என இந்தியா எண்ணுகிறது. இது உலக அளவில் இந்தியா அவமானம்படும் என்பதை குறுகிய காலத்திலே நாம் பார்க்கலாம்.

கடமை தவறிய ஐ.நா. மன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரியும், மனித உரிமை கமிஷனில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி உலகலாவிய சுதந்திரமான விசாரணை கோரியும் வருகிற 12- ந்தேதி சென்னையில் உள்ள ஐ.நா. மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. அந்த போராட்டத்தில் நானும் கலந்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்குகிறது. விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்காத நிலையில் இந்த நிவாரணம் கொடுப்பது ஏதோ இல்லாததற்க்கு இதுவாவது கொடுக்கப்படுகிறதே என ஆறுதலாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும், விவசாயத்தை நம்பி வாழ்கின்ற மக்கள் இனி என்ன செய்யபோகிறோம் என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் பல மாவட்டத்தில் வறட்சியால் மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பாதுகாத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் மோகன் உடன் இருந்தார்.


No comments:

Post a Comment