Saturday, February 16, 2013

பன்னாட்டு விசாரணை தேவை-வைகோ

ஈழத்தமிழர் படுகொலை : பன்னாட்டு விசாரணை தேவை
ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்

வைகோ கோரிக்கை

இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், தமிழ் இன அழிப்பு தொடர்வதும் குறித்து, அனைத்து உலக நாடுகளின் மனசாட்சியின் கதவுகள் தட்டப்படும் சூழலில், ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கின்றது.



2009 இல், இந்தியாவும், கியூபாவும் முழுமுயற்சி எடுத்து, சிங்கள அரசைப் பாராட்டி மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தது. கடந்த ஆண்டு, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில், வேறு நாடுகள் தலையிடக்கூடாது என்று இந்திய அரசு மேற்கொண்ட அநீதியான நிலைப்பாட்டுக்கு, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு வெடித்தது. மேலும், பெரும்பாலான நாடுகள், கண்ணை மூடிக் கொண்டு இலங்கை அரசை ஆதரிக்கும் போக்கைச் சிறிது மாற்றிக் கொண்டதால், இந்தியாவும் வேறு வழி இன்றி, இலங்கை அரசு அமைத்த எல்எல்ஆர்சி பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், சிங்கள அரசின் ஒப்புதலோடுதான் எதையும் செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தை மாற்றி, நீர்த்துப் போகச் செய்தது.

குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை, சிங்கள அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும் பயன்படுத்தி, இராணுவத் தாக்குதலில் படுகொலை செய்த உண்மைகளை, சேனல் 4 ஆவண ஆதாரங்களுடன், ஐ.நா. அறிவித்த, மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டது.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஆலோசகர் விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் உள்ளிட்ட சில அதிகாரிகள், திட்டமிட்டே ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையில் தவறியதாலும், தமிழர்கள் கொல்லப்பட்ட வேளையில், பட்டினியாலும், மருத்துவ சிகிச்சை இன்றியும் மடிந்து கொண்டு இருந்த வேளையில், அவர்களை நிர்க்கதியாக மரணத்தின் விளிம்பில் தவிக்க விட்டுவிட்டு, ஐ.நா.அதிகாரிகள் வெளியேறியதாலும், ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்தே ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தாருஸ்மன் குழு கோரிக்கை விடுத்தது.

தற்போது, மனித உரிமை கவுன்சிலில் நடக்கப் போவது என்ன என்று உலகெங்கும் தமிழர்கள் உடைந்த உள்ளத்தோடு, நீதியின் வாசல் திறக்காதா? என்று எதிர்பார்த்து இருக்கின்ற இந்த நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம் பிள்ளை, ஒரு அறிக்கையை பிப்ரவரி 11 ஆம் தேதி தாக்கல் செய்து உள்ளார்.

சிங்கள அரசு, உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் என்று, கபடமும், பொய்களும் கொண்ட ஒரு ஆணையத்தை அமைத்தது. மோசடியான இந்த ஆணையத்தின் ஏமாற்று வேலையான பரிந்துரைகளை நிறைவேற்றினாலே ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு ஏற்பட்டு விடும் என்று, சிங்கள அரசுக்கு உதவிடும் நோக்கத்தோடு, இந்தியாவும், ஏன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுமே இம்மாய்மால வேலையில் ஈடுபட்டு உள்ளன.

தாய்த்தமிழகத்துத் தமிழர்களும், தரணி வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், இந்த நயவஞ்சக நாடகத்தில் ஏமாந்துவிட மாட்டார்கள்.

ஈழத்தமிழர் படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பும்தான், தமிழர் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கான ஒரே வழி ஆகும் என்பதை இலக்காகக் கொண்டு, நீதிக்குப் போராட வேண்டிய கடமையில் இருக்கிறோம்.

இருள் சூழ்ந்து உள்ள இந்த நேரத்தில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கை, காயப்பட்ட தமிழர் மனதுக்கு, சற்றே ஆறுதல் தருகிறது. சிங்கள அரசு அமைத்த, எல்எல்ஆர்சி யை எதிர்த்து, எடுத்த எடுப்பிலேயே கருத்துக்கூற முடியாத நிலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையாளர், தமிழர்களின் கொடுந்துயரை, தனது அறிக்கையில் உள்ளீடாகப் பதிவு செய்து உள்ளார்.

சிங்கள அரசின் எல்எல்ஆர்சி ஆணையம், தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுகின்ற விதத்தில் செயல்படவில்லை. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து, சரியான விசாரணை நடக்கவில்லை; பாரபட்சம் அற்ற அணுகுமுறை இல்லாததால், தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. நீதிக்கு முரணான படுகொலைகள், ஆள் கடத்தல்கள், தமிழர்கள் காணாமல் போதல், சிறைப்படுத்துதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

2012 செப்டெம்பரில் மனித உரிமைகள் ஆணையத்தின் நிபுணர் குழு, இலங்கைக்குச் சென்று முன்வைத்த கோரிக்கைள் பலவற்றை, சிங்கள அரசு ஏற்கவில்லை. இன்றைய ஈழத்தமிழர் இன அவலத்துக்கே காரணம் யாதெனில், இதுவரை அமைந்த சிங்கள அரசுகள், தமிழர்களின் துன்பங்களைப் போக்கவோ, நியாயமான கோரிக்கைகளை ஏற்கவோ முன்வரவில்லை.

எல்எல்ஆர்சி கொடுத்த பரிந்துரைகளில் கூட, பலவற்றை சிங்கள அரசு செயல்படுத்தவில்லை. ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. கடந்த நவம்பர் 27 இல், விடுதலைப்புலிகள் மாவீரர் நாளைக் கடைப்பிடித்ததற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

எண்ணற்ற தமிழர்கள், யுத்தத்துக்குப் பின்னரும் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி எந்த உண்மையையும் அறிய முடியவில்லை. இது, மனித உரிமைகளை நசுக்கும் போக்கு ஆகும்.

இப்படிக் காணாமல் போனவர்கள் குறித்து ஆய்வு செய்த செயல்பாட்டுக் குழுவினர் தெரிவித்த புள்ளி விவரமே, 5676 பேர்கள் என்பது ஆகும்.

2011 செப்டெம்பருக்குப் பின்னர், 2012 ஜூன் வரையிலும் பலர் காணாமல் போயினர். அரசியல் தொண்டு புரிந்த பலரும், அவர்களது குடும்பத்தினரும் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களுள் பலர், சித்திரவதை செய்து கொல்லப்பட்டு உள்ளனர்.

சேனல் 4 வெளியிட்ட படுகொலைக் காட்சிகள் குறித்து, இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில், சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டு, ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம், முகாம்களை அமைத்து உள்ளது. தமிழர் வீடுகளுக்குச் சென்று, விசாரணை என்ற பெயரால், துன்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, தமிழ்ப் பெண்களுக்குப் பாதுகாப்பு அற்ற நிலை இருக்கிறது.

அரசாங்கக் கணக்குப்படிகூட, மாணிக்பார்ம் முள்வேலி முகாம்களில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் கணக்கில், இன்னமும் 18000 பேர், தங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேரவில்லை. தமிழர் பகுதிகளில் இராணுவமே அதிகாரம் செய்கிறது. எடுத்துக்காட்டாக, மன்னாரில் முள்ளிக்குளத்திலும், முல்லைத்தீவில் கெப்பப்புலவு என்ற இடத்திலும், இராணுவ முகாம்கள் உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் கொடும் அவலங்களால், அவர்கள் அன்றாட வாழ்வாதாரங்களுக்காக வேலைக்குக்கூடச் செல்ல முடியாத நிலை இருக்கிறது.

சிங்கள இராணுவம், போரில் இறந்த சிப்பாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் தமிழர் பகுதிகளில் கட்டுவதும், யுத்த அருங்காட்சியகங்கள் அமைப்பதும், வேகமாக நடக்கையில், போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு, ஈமச்சடங்குகள் அஞ்சலி நடத்தக்கூட, தமிழர்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி நடப்பதாக இருந்தாலும், அங்கு சிங்கள இராணுவத்தினர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் நடத்த வேண்டும். அதுவும், சிங்கள அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் நடத்தவேண்டும். குடும்ப நிகழ்ச்சிகள், சமயச் சடங்குகளைக் கூட, சுதந்திரமாக நடத்த அனுமதி இல்லை. இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தில், சிங்கள அரசு, ஒரு உல்லாச ஓய்வு மாளிகை கட்டி இருக்கிறது.

நீதித்துறைக்குச் சுதந்திரமே இல்லை. 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிங்கள அரசியல் சட்டத்தின் 18 ஆவது திருத்தத்தின்படி, நீதித்துறையில் நீதிபதிகளை நியமிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் சிங்கள அதிபருக்குத் தரப்பட்டு உள்ளது.

இதனால், இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து சிலானி பண்டாரநாயகாவை 2013 ஜனவரி 13 இல், நீக்கி விட்டு, ஜனவரி 15 ஆம் தேதி, இராஜபக்சேவுக்கு உடந்தையாக, அதுவரை அட்டர்னி ஜெனரலாக ச் செயல்பட்ட மோகன் பீரிசை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்ததை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் குறிப்பிட்டு, இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இயங்காது என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

பல பரிந்துரைகளை, ஐ.நா. மனித உரிமை ஆணையர் தந்து விட்டு, அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, அறிக்கையின் நிறைவுப் பகுதியில், இலங்கையில் மனித உரிமைகள், மனித நேயச் சட்டங்கள், அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து, ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடைபெற வேண்டும் என்று அறிக்கை தந்து உள்ளார்.

எனவே, ஈழத்தமிழர் படுகொலை குறித்து, தொடரும் அவலம் குறித்து, சுதந்திரமான, பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறுவதற்கு உரிய தீர்மானத்தை, ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றினால்தான், நீதியின் வெளிச்சம் தமிழர்களுக்குக் கிடைக்கும்.

சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு அனைத்து உதவிகளையும் செய்து, உடந்தையாகச் செயல்பட்ட, கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, இனிமேலாவது, தமிழர்களுக்குத் துரோகத்தைத் தொடர மாட்டோம் என்பதைத் தெரிவிக்கும் எண்ணம் இருந்தால், மனித உரிமை ஆணையர் அறிவித்து உள்ள பரிந்துரையை ஏற்று, சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்துவதற்கு மனித உரிமைகள் கவுன்சிலில் குரல் கொடுக்க முன்வருமா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

அப்படிக் குரல் கொடுக்கவில்லை எனில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் துரோகம் தொடர்கின்றது என்பதற்கு, அதுவே அப்பட்டமான சாட்சியம் ஆகும்.



No comments:

Post a Comment