பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்!
வைகோ அறிக்கை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் காரணம் காட்டி, பெட்ரோல் விலை ரூ 1.90, டீசல் விலை 56 காசு என மத்திய அரசு விலை உயர்த்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 இல் பதவி ஏற்றபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 37.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 26.28 ஆகவும் இருந்தது.
கடந்த எட்டு ஆண்டுகளில் இவை 120 சதவிகிதம் அதிகரித்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்தியாவைவிட மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. பெட்ரோல் விலையை பொருத்தமட்டில் இந்தியாவை விட சீனாவில் 50 சதவிகிதமும், பாகிஸ்தானில் 48 சதவிகிதமும், வங்கதேசத்தில் 58 சதவிகிதமும், மலேசியாவில் 68 சதவிகிதமும், அமெரிக்காவில் 47 சதவிகிதமும், வியட்நாமில் 49 சதவிகிதமும், நியூசிலாந்தில் 29 சதவிகிதமும் இந்திய விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
ஆனால் மத்திய காங்கிரஸ் கூட்டணி, அரசு பகல் கொள்ளை அடிப்பதைப் போல, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாக உயர்த்தி வருவது கண்டனத்திற்கு உரியதாகும். 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயும், நிலக்கரி ஊழலில் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாயும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்தியதில் ஆயிரத்து 500 கோடி ரூபாயும், இராணுவ கெலிகாப்டர் வாங்கியதில் 362 கோடி ரூபாய் என்று அடுக்கடுக்கான ஊழலில் ஈட்பட்டு, நாட்டையே திவாலாக்கி வரும் காங்கிரÞ கூட்டணியின் அரசு சாதாரண ஏழை எளிய மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் விலைவாசி கடுமையாக அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கும். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment