Saturday, February 16, 2013

வீரப்பனையே பார்க்காத அப்பாவிகளுக்கு மரணதண்ட னை - வைகோ

வீரப்பனையே பார்க்காத அப்பாவிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியினால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் நேற்று திருப்பூர் அருகே சென்னிமலையில் வைகோ, கொளத்தூர் மணி ஆகியோரை சந்தித்தனர்.

வைகோ ஆறுதல்

ஞானபிரகாஷ் ஜோஸப்பின் மனைவி செல்வமேரி, அண்ணன் இன்னாசிமுத்து, பிலேந்திரா மரிகவுடா மனைவி கமலாமேரி மகள் ஜோஸ்வின் பாஸ்கா மேரி, சைமன் அந்தோனியப்பா அண்ணன் ஜெயராஜ் மற்றும் மணி ஆகியோர் நேரில் வந்து சந்தித்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

"இந்த சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பு இல்லாத இவர்கள் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது வேதனை தருகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என கூறியும் கர்நாடகா மாநில சிறையில் சித்ரவதை செய்துள்ளனர். அவர்களை நிர்வாணம் ஆக்கி மின்சாரம் பாய்சியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். 

நான்குபேருக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லை என கூறி தடா நீதி மன்றம் மரணதண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யதான் உச்ச நீதிமன்றம் சென்றனர் ஆனால் அங்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்களின் கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள் பல கொடுமையான சம்பவத்திற்கு கூட கருணை மனு ஏற்கபட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத இவர்களை விடுவிக்க வேண்டும் தூக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 

அப்பாவியான 4 தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றபட வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு நான் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவர்களின் வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும்" என்று வைகோ கூறினார்.

வீரப்பனை பார்த்தது இல்லை 

இதனிடையே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என்று கூறும் உறவினர்கள், 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

வேறொரு வழக்கில் கைது 

பிலவேந்திரன் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என்று கூறும் அவரது உறவினர்கள், வேறொரு வழக்கில் அவரை கைது செய்த காவல்துறையினர், பின்னர் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் அவரை சிக்க வைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

பிலவேந்திரனை தூக்குமேடையில் இருந்து காப்பாற்ற, மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகளையும், இயக்கங்களையும் அவரது உறவினர்கள் நாடியுள்ளனர். இதேபோல் சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினரும் மரணதண்டனையை தண்டனையை எதிர்த்து போராட தயாராகிவருகின்றனர். ஈரோட்டில் நடைபெற உள்ள அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு மாநாட்டிலும் இந்த நால்வரின் குடும்பத்தினரும் பங்கேற்க உள்ளனர். 

சர்வதேச பொது மன்னிப்பு சபை 

இந்த நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அதன் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் மாதம் முதல், இந்தியாவில் தொடர்ந்து தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதே போக்கு நீடிப்பது வேதனையான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே 4 பேரின் தூக்குதண்டனையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆனந்தபத்மநாபன் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment