Thursday, February 14, 2013

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க- வைகோ

விவசாயிகளின் நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க!

வைகோ கோரிக்கை

கொடிய வறட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு விடிவே இல்லையா? என்று ஏங்கி பரிதவிக்கும் நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களை (கொச்சி முதல் பெங்களூரூ வரை) உள்ளடக்கிய 136 கிராமங்கள் வழியாக 310 கி.மீ. தூரம் கியாஸ் குழாய்களை அமைக்கும் பணியினைத் தொடங்கி உளள்ளது.



ஏழை, எளிய விவசாயிகள் சொற்ப அளவில் உள்ள தங்கள் நிலத்தை மட்டுமே, குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரே வருவாய் ஆதாரமாகக் கொண்டிருக்கும் போது, அவர்களின் அனுமதியோ, முன் அறிவிப்போ இன்றி விவசாயிகளை யும், விவசாயக் குடும்பத்துப் பெண்களையும் காவல்துறையின் துணையோடு அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து எறிந்து அப்புறப்படுத்து விட்டு, கியாஸ் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கெயில் இந்தியா நிறுவனத்தின் செயலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் அவர்களின் அமர்வு அளித்தத் தீர்ப்பு கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.

“கியாஸ் குழாய் பதிப்பது அவசியம் என்றாலும, வளமான விவசாய நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்கும்போது, விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அவர்கள் தங்கள் நிலத்தின் மீது உரிமை இழந்தவர் ஆவார்கள். கெயில் இந்தியா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. நியாயமான முறையில் முயற்சிகள் மேற்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கெயில் இந்தியா நிறுவனம், மாவட்ட ஆட்சித் தலைவர், நில உரிமையாளர் என முத்தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக தீர்வு காண முன்வரவேண்டும். தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகள் வழியாக குழாய்கள் பதிக்கலாம் என்று நில உரிமையாளர்கள் தெரிவிக்கும் மாற்று வழிகள் குறித்தும், விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று கூறிய எதையும், அரசு செயல் படுத்த வில்லை. விவசாய நிலத்தில் குழாய் பதிக்க வழிகாட்டு மதிப்பில் 13 சதவீதம் மட்டும்தான் வழங்கப்படும் என்பது அநியாயமாகும். பிரதானச் சாலைகளை ஒட்டி அமைந்திராத விவசாய நிலங்களின் வழிகாட்டு மதிப்பு என்பது சந்தை மதிப்பைவிடக் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், அந்த வழிகாட்டு மதிப்பிலும் நூறு விழுக்காடு தராமல், 13 விழுக்காடுதான் விவசாயிகளுக்கு தருவோம் என்பது அவர்களின் மென்னியை முறிக்கும் செயலாகும். தவிர, குழாய் பதிக்கப்படும் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் 20 மீட்டர் தூரத்திற்கு கட்டிடங்கள் எழுப்பக்கூடாது, மரங்களை நடக்கூடாது என்று கூறுவது, முழு நிலத்தையும் கபளீகரம் செய்யும் செயலாகும். இதே இடத்தில் தென்னை போன்று பயிரிட்டுள்ள விவசாயிகளுக்குரிய நிவாரணம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

விவசாய நிலத்தில் கியாஸ் குழாய் பதித்தால் ஒட்டுமொத்த விவசாய நிலமும் பாதிக்கப்படுகிறது. எனவே, 100 சதவீதம் நிவாரணத் தொகை சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டு மதிப்பு இவற்றில் எது அதிகமோ அதனை வழங்கவும், தென்னை, மா, முந்திரி, மலர்கள் போன்ற நிரந்தர வருவாய் தரும் நிலங்களுக்கு விவசாயிகள் ஒப்புக்கொள்ளும் கட்டுபடியான நிவாரணத் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.

ஏற்கனவே, விளைச்சல் பாதித்து துன்பச் சூழலில் சிக்கிக் கிடக்கும் விவசாயிகளின் தலையில் பாராங்கல்லைத் தூக்கிப் போடும் செயலாக, தங்கள் நிலத்தில் பதிக்கப்பட்ட கியாஸ் குழாய்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று விவசாயிகள் நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவனே நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமென்பது நீதிக்கே எதிரானது. சர்வதிகாரமனது.

இயற்கைப் பேரிடர்கள், நிலநடுக்கம், காட்டாற்று வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் கியாஸ் குழாய்களுக்கு ஏற்படும் சேதங்களுக்குக்கூட, நீதிமன்றங்களிலும், விசாரணை மன்றங்களிலும் நாள் முழுக்கக் காத்துக்கிடந்து வாக்குமூலம் கொடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும் மத்திய அரசின் இக்கொடிய சட்டம்.

இப்படி விவசாயிகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றுகிறது மத்திய அரசு. மாநில அரசு இதில் விழிப்பாக இருந்து உரிய விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடு வழங்குவதோடு, இக்கொடிய சட்டச் சரத்துகளின் கோரப்பிடியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட முன்வரவேண்டும் என்பதுடன், காவல்துறையின் துணைகொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்க முயலும் போக்கை அடியோடு கைவிட்டு விட்டு, நில உரிமையாளர்களாம் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண முன்வரவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment