Tuesday, April 10, 2012

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்! -பாசமுடன் வைகோ

இமைப்பொழுதும் நீங்காது

என் இதயத்துடிப்போடும்

இரத்தச் சுழற்சியோடும்

கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

நாட்கள் பல ஆகிவிட்டனவே,உங்களுக்கு மடல் எழுதி ?

போராளிக்குத் தோல்வி இல்லை; போராட்டக் காரனுக்கு ஓய்வும் இருக்க முடியாது. களங்களைக் கடந்து கொண்டே இருப்பவனுக்கு, வெற்றியும், தோல்வியும் ஒன்றேதான்.

இடைத்தேர்தல் என்பது நடைபெறும் ஆட்சியின் மக்கள் மதிப்பீட்டைக் கணக்கிடும் உரைகல்லாக இருந்தநிலை, இப்போது தலைகீழாக மாறிவிட்டது.



போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதெல்லாம், இன்று கதைக்கு உதவாத வெற்று உபதேசமாக ஆகிவிட்டது.

மனித மனம் ஆசையைத் துறந்து விட இயலாது. துறக்கின்றவர்கள், வெகுசிலரே!

நுகர்வுப் பொருளாதார மூச்சுத்திணறலில் சமூகம் சிக்கி இருக்கின்றது. ஆடம்பரங் களையே தேவைகள் என ஆக்கிடும் விளம்பர மயக்க மருந்தில் ஏக்கம் ஒருபக்கம் மக்களுக்கு!

கரன்சி நோட்டுகளைக் கட்டுக் கட்டாகத் திணித்து,வாக்காளர்களை விலைபேசி, ஓட்டுகளை விலைக்கு வாங்கிவிடும் இழி நிலைஅரசியல் வெற்றிக் கோலோச்சுகிறது.

வாக்காளர்களின் தேவைகளைக் கவனிப்பதும், இலைமறை காய்மறையாக ஒன்றிரண்டு இடங்களில் சொற்பப் பணத்தை ஓட்டுக்குக் கொடுப்பதும், ஆங்காங்கு கடந்த காலத் தேர்தல்களில் நடைபெற்றது உண்டு.

ஜனநாயகத்தின் மூல பலமாகிய மக்கள்சக்தி, அவற்றை யெல்லாம் வாரிச் சுருட்டி எறிந்து விட்டு, தீர்ப்பினை வழங்கி,மக்கள் ஆட்சிக்குப் புகழைத் தந்து வந்ததையும் கண்டு இருக்கின்றோம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், ஊழல் பணத்தைக் கோடி கோடியாகக் கொட்டி, மாட்டுச் சந்தையில் மாடுகளை விலைக்கு வாங்குவது போல், தேர்தல் சந்தையில் வாக்காளர்களின் ஓட்டுகளை விலைக்கு வாங்கி, அவர்களின் கழுத்திலேயே அதிகார அக்கிரம நுகத்தடியைக் கழற்றிவிட
இயலாத வாறு மாட்டி விடும் காட்சியும் அரங்கேறுகிறது.

திருமங்கலம் பார்முலாவை சங்கரன்கோவில் பார்முலா உடைக்கட்டும்; புதியபாதை அமையட்டும் என மக்கள் மன்றத்தில் வேண்டினோம்.

தொகுதி யெங்கும் சுற்றிவந்தேன்.அனைத்துக் கிராமங்களிலும் அளப்பரிய வரவேற்பு. அந்த அன்பு மழையில், உள்ளத்தில் ஆனந்த வெள்ளம். திக்கு முக்காடித்தான் போனேன்.

கனிந்த முகங்கள், இனிய சொற்கள்; ஆர்வத்துடன் கரங்களைப் பற்றிக் கொண்ட எளிய மக்கள். அவர்கள் மனதில் பதியும் வண்ணம்,எளிய முறையில் கிராமத்து நடையில்எனது பிரச்சாரம்.

ஆருயிர்த் தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களின் இடி முழக்கமும்,தேனருவித் தமிழ் உரையும், இதோ வெற்றி நம் எல்லைக்குள் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

பகுத்தறிவைக் கூர் தீட்டும் திராவிடக் கருத்துக் களஞ்சியமாம் பெரியார்தாசன் அவர்களின் உரைகளும் துணை செய்தன.தமிழகத்தில் நமக்கு ஈடு இல்லை என்று சொல்லத் தக்க ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் களின் அனலும் புனலும் பாய்ந்த பிரச்சாரம் எங்கும் நடந்தது.

நமது தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், கண்மணிகள், பல்வேறு அமைப்பு அணிகளின் வீறுகொண்ட தோழர்கள், நெஞ்சுக்கு இனிய இணையதள நண்பர்கள், மகளிர் அணிச் சகோதரிகள், தொகுதிக்கு உட்பட்ட கழக அமைப்புகளின் நிர்வாகிகள்,வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை ஒரு முறைக்கு ஐந்து முறைக்குக் குறையாமல் சந்தித்து,நமது வேட்பாளர் டாக்டர் சதன்.திருமலைக்குமார் அவர்களுக்கு ஆதரவு நாடியபோது ,இதமான பதிலையும், நம்பிக்கை ஊட்டும் வார்த்தை களையுமே வாக்காளர்கள் தந்தனர்.

தன்னலம் அற்ற தூய பொதுத் தொண்டுக்கு இளைஞர் உலகத்தை அறைகூவி அழைக்கும் சிந்தனைச் சொல்லருவி, காந்தியமக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் அவர்கள், தனது தோழர்களோடு ஓய்வு இன்றி உழைத்து, உன்னதமான உரைகளையும் நிகழ்த்தினார்.

காலை 6.30 மணிக்கெல்லாம் பிரச்சாரத்துக்குப் புறப்பட்டு,வீடுவீடாக வாக்காளர் களைச் சந்தித்து, 11.00 மணிக்கு இல்லம் திரும்புவேன்.பிற்பகல் மூன்று மணிக்கு, பிரச்சாரத்தைத் தொடங்கி விடுவேன். சங்கரன்கோவில் நகரத்தில், அகன்ற தெருக்களில் மட்டும் அல்ல, சின்னஞ் சிறிய சந்து பொந்து களில் எல்லாம் நான் நடந்தே சென்று வாக்காளர்களைச் சந்தித்த போது, பெரியவர்கள், தாய்மார்கள், இளம் தங்கையர்,வாலிபர்கள்,வீட்டு வாயிலில் மலர்ந்து சிரித்த முகத்தோடு வரவேற்று, “ இம்முறை பம்பரத்துக்குத்தான் ஓட்டு என்றும்; உங்களுக்குத் தான் இந்தத்தடவை ஓட்டு”  என்றும், தாங்களாகக் கூறியபோது,என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.

எங்கும் ஒரு அலட்சியப் பார்வையை நான் காணவில்லை. ஏளனச்சொற்கள் எப்பக்கமும் எழவில்லை. அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகள், தெருக்களில் என்னைச் சூழ்ந்து கொண்டு போட்ட அன்பு முற்றுகை,அவர்களின் வீடுகளில் உள்ள பெற்றோரும்,பெரியவர்களும் நம்மீது கொண்டு இருக்கின்ற நல்லன் பின் வெளிப்பாடாகவே எண்ணினேன்.

தேர்தல் முடிவு எப்படியும் ஆகட்டும். பொது மக்களின் நல்லெண்ணத்தையும், பரிவையும் ஒருசேரப் பெறுகின்ற அளவுக்கு நமது நம்பகத்தன்மை வலுப் பெற்று உள்ளது என்றே கருதினேன்.
ஓய்வு பெற்ற ஒரு உயர்காவல் அதிகாரி,வாக்குப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு என்னை அலைபேசியில் அழைத்து, வாழ்த்துச் சொன்னார். ‘எதற்கு?’ என்றேன். ‘உங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கணக்கிடு கிறார்கள். தொகுதி முழுவதும் பலத்த ஆதரவு இருக்கிறதாம்’ என்றார்.எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஆளும் அண்ணா தி.மு.க. தொகுதி முழுக்கப் பணத்தால் முற்றுகை இட ஆயத்தமாவதை, முதல் அமைச்சர் வருகையை ஒட்டி ஊகித்துக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் நகரத்தின் வார்டுகளிலும், கிராமங்களிலும் வருவோர் போவோருக் கெல்லாம் பணத்தை வாரி இறைத்தனர்.

மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவோமோ? என்றஅச்சத்தில், தி.மு.கழகம் ஊர் ஊராகப் பணத்தைக் கொட்டத் தொடங்கியது.பின்பு நடந்தவை, உங்களுக்கே தெரியும். மார்ச் 14 ஆம் தேதி வரை ஊக்கத்தோடும், உவகை யோடும் வீறுகொண்டு களப்பணி ஆற்றிய நம்மவர்கள், தொகுதி முழுக்கப் பிரளயமாகப் பாய்ந்த ஊழல் பணத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தார்கள்.

வீடு தவறாமல் ஓட்டுக்கு ஆயிரம், சில இடங்களில் 2000, 3000 என அண்ணா தி.மு.க.  ஒவ்வொரு குடும்பத்துக்கும், எட்டாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் எனக் குவித்தனர்.ஒரே நாளில்,ஒரு மணிநேரத்தில், தொகுதி முழுக்கப் பணப் பட்டு வாடா செய்வதற்கு, 32 அமைச்சர்கள், மேயர்கள், சட்டமன்ற உறுப்பினர் கள், கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே திட்டமிட்டு ஆட்களை அனுப்பி, வினியோகம் செய்து முடித்து விட்டார்கள்.

பணம்கொடுக்கும் போது கையும் மெய்யுமாகப் பிடிபட்டவர் களை, கலிங்கப்பட்டியில் வாகனங்களோடு காவல்துறையிடம் ஒப்படைத்தோம்.

இந்த இடைத்தேர்தலில், சகிக்க முடியாத அக்கிரமம் என்னவென்றால், தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதன்யு என்ற நபர்,தொகுதிக்குள் எந்த இடத்தையும் பார்வை இடவும் இல்லை; ஆளுங் கட்சியினரின் உபசரிப்பு மயக்கத்திலேயே இருந்தார்போலும்!

பணப் பட்டுவாடா குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் புகாரும் செய்தேன்.குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல,வாக்குப்பதிவு அன்று பிற்பகலில், கலிங்கப்பட்டி கிராம வாக்குச் சாவடி களைப் பார்வை இட்டுவிட்டு, செய்தியாளர்களிடம்,‘வாக்காளர் களுக்கு எங்கும் பணம் கொடுக்கப்படவே இல்லை; அது பற்றி எந்தப் புகாரும் இதுவரை எனக்கு வரவும் இல்லை’ என்று, தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,தலைமைத்தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் புகார் அனுப்பினேன். தமிழ்நாட்டில் உள்ள தலைமைத் தேர்தல்ஆணையத்தின் அதிகாரி பிரவீன்குமார், இந்த இடைத் தேர்தலில் முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே செயல்பட்டார்.

ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர் களைக் காவல் துறையிடம் ஒப்படைத்த தற்குப் பலனாக,என்தம்பி வை.ரவிச்சந்திரன் மீதே கிரிமினல் வழக்கினைப் பதிவு செய்து உள்ளனர்.

ஓட்டுக்குப் பணம் கொடுக்கத் தி.மு.க.தவற வில்லை. ஓட்டுக்கு 500,சில இடங் களில் ஆயிரம் வரை யிலும், தொகுதி முழுக்கப் பணத்தைத் தி.மு.க.வாரி இறைத்தது. பொதுஉடைமைக் கட்சிகளின் துணையோடு போட்டியிட்ட பிறிதொரு கட்சியும்,தன் பங்குக்கு ஓட்டுக்கு 300 கொடுக்கத்தான் செய்தது.

வருடம் முழுக்க வியர்வை சிந்தி நிலத்தில் உழைத்தாலும் ஈட்ட முடியாத வருமானத்தை, பத்தாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம் எனத் தங்கள், வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ளும் போது, இடைத்தேர்தல் தேவதையின் கருணை மழையாகத் தானே கருதுவார்கள்?

மின் கட்டணமும், பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டு, குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு 2000 ரூபாய் அதிகச் செலவு என்றால், ஓராண்டுக்கு 24,000 ரூபாய் பாறாங் கல்லாகத் தலையில் விழுகிறதே என்ற நமது பிரச்சாரத்தைச் சீர்தூக்கி முடிவு எடுக்கும் விழிப்பு உணர்வு, இப்போதைக்கு மக்களிடம் ஏற்பட வில்லை.

ஓடாத விசைத்தறிகள், அடிப்படைத் தேவைகளுக்கு ஈடுகட்ட முடியாத பொருளாதார நெருக்கடி, இதில் சிக்கி விழி பிதுங்கும் மக்களுக்கு,பத்தாயிரம், இருபதாயிரம் என்பது,லாட்டரிப் பரிசாகத் தானே, அவர்கள் மனங்களை ஆக்கிரமித்தது? இந்த அழுத்தத்தில் தானே ஓட்டுப் போட்டார்கள்?

ஓட்டுக்கு ஒரு காசும் செலவழிக்காமல், ஜனநாயகத்தின் தூதுவர்களாக நம்மவர்கள் வாக்காளர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர். சூறைக் காற்றாய் மோதியடித்த ஊழல் பணத்தின் தாக்குதலையும் எதிர்கொண்டு, 20,678 வாக்காளர் கள், நமது பம்பரம் சின்னத்துக்குத் தந்த வாக்குகள் ஒவ்வொன்றும், கோடிப் பொன்னை விட மதிப்புக் கொண்டவை. அதனால்தான், ‘விலை மதிக்க முடியாதவை’ என்று அறிக்கை தந்தேன்.

ஒரே யொரு மனவேதனை தான் என்னை வெகுவாக வருத்துகிறது. தன்னலம் அற்ற, தூய்மையான பொதுப் பணிக்கு, ஊழல் அற்ற நேர்மையைத் தானே தாரக மந்திரமாகச் சொன்னார் அண்ணல் காந்தி அடிகள்? ‘சத்தியமே வெல்லும்’ என்ற மூல முழக்கத்தை,அரசமுத்திரையாக ஆக்கிக் கொண்டே,
சத்தியத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் பெருங்கேடு போலவே, கள்ளம் அற்ற குழந்தையின் சிரிப்பைப் போல,புன்னகை சிந்தும்,மகாத்மா காந்தியின் முகப்படம் அச்சிட்ட ஆயிரம் ரூபாய் தாளும், ஐநூறு ரூபாய் தாளும் அல்லவா வாக்காளர்களை விலைக்கு வாங்க ஊழல் திமிங்கலங்கள் அள்ளி வீசு கின்றன.

ஊழலைக் களைவது சாத்தியம் இல்லை; அதெல்லாம் இனி ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய வழமைதான், நடைமுறை தான் என்ற பிதற்றல் ஒலியே ஓங்கி வருகிறதே?

அப்படியானால், இந்திய அரசு, இந்தியாவின் ரிசர்வ் வங்கி, உடனடியாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு நாள் மாலை ஐந்து மணி அளவில் தான், நாதுராம் விநாயக கோட்சே மூன்று தோட்டாக்களை மகாத்மாவின் மார்பில் செலுத்தினான்.ஒவ்வொரு தேர்தலிலும், இடைத் தேர்தலிலும், மகாத்மாவின் மார்பில் ஊழல் பணம் குண்டுகளாக அன்றோ பாய்கிறது?

ஓட்டுக்குப் பணம் கொடுக்க, அவரையே அனுமதிச் சீட்டாக ஆக்கும் அக்கிரமத்தை அறவே ஒழிக்க, கரன்சி நோட்டுகளில் காந்தியாரின் படத்தை அச்சிடக் கூடாது.

இந்த ஊழல் அரசியல் சதுப்பு நிலத்தில் இருந்து, நாடு மீட்கப் பட்டதற்குப் பிறகு,கரன்சி நோட்டுகளில் காந்தியாரின் படத்தைப் போடுவது பற்றி மறுபரிசீலனை செய்யலாம்.

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்

வைகோ



செய்தி வெளியீடு :- சங்கொலி ,நன்றி சங்கொலி குழுவிற்கு 

1 comment:

  1. You are a Genuine Leader.. Come what may I will stand by you,

    ReplyDelete