மார்ச் 2-ஆம் தேதி மாலையில் மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரள்
#வைகோ அறிக்கை
1991 மே 21-இல் திருப்பெரும்புதூரில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் துளி யளவும் தொடர்பில்லாத குற்றமற்ற நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 16 ஆண்டுக்காலம் மரணக் கொட்டடியில் தூக்குமரத்தின் நிழலில் விவரிக்க இயலாத மனத்துன்பத்தால் வாடினர். மொத் தத்தில் 23 ஆண்டுகள் வெஞ்சிறையில் அவதியுற்றனர். 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்தது. நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் , ரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 23 ஆண்டுகள் சிறைச்சாலையில் வாடிவதங்கினர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-ஆவது பிரிவின்கீழ் ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுவிக்கவும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து அதைத் தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அறிவித்தார்.
தமிழ் இனத்துக்கும், தமிழகத்துக்கும், ஈழத் தமிழர்களுக்கும் கேடும், வஞ்சகமும், துரோகமும் செய்து வரும் மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழு பேரையும் விடுதலை செய்வதற்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன் அவர்கள் மற்றும் சத்திய நாராயணா அவர்கள் அமர்வு முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனையை செப்டம்பர் 9-இல் நிறைவேற்றக் கூடாது என்று தடை விதித்து தீர்ப்பு அளித்தது மிக முக்கியமான திருப்பம் ஆகும்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்றும், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத் தலைமையின் ஏற்பாட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
23 ஆண்டுகள் சிறைச்சாலையில் துன்புற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வது மனிதாபிமான நடவடிக்கை ஆகும். ஆனால், அத்தகைய மனிதநேய எண்ணமின்றி தமிழ்க்குல மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும் ஏழு தமிழர்களையும் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் மார்ச் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மக்கள் பெருந்திரள் ஒன்றுகூடல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்றது.
அந்த நிகழ்ச்சியில் மனிதஉரிமை ஆர்வலர்களும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும், மாணவச் செல்வங்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
01.03.2014 மறுமலர்ச்சி தி.மு.க.,
No comments:
Post a Comment