Saturday, March 24, 2012

வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்


வன்னிஅரசு கைதுக்கு வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அறவழியில், காந்திய வழியில் தொடர்ந்து கடற்கரையோர மக்கள், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இடிந்தகரையில், உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அணுஉலைக்கு எதிராக நேற்று (23.3.2012) பாளையங்கோட்டையில், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏராளமானவர்கள் பங்கேற்ற போராட்டம், வன்முறைக்குத் துளியும் இடமின்றி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டபின், போராட்டத்தில் கலந்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு அவர்களை, நேற்று நள்ளிரவுக்கு மேல் இராசபாளையத்திற்கு அருகே கைது செய்துள்ளனர். அவர் மீதும் பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளது.



கடந்த ஆறுமாத காலமாக இடிந்த கரையில் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்று வந்த ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் அவர்கள் மீது அப்பட்டமான பொய் வழக்குகளைப் போட்டு, கைது செய்து தமிழக காவல்துறை சிறையில் அடைத்து உள்ளது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தினரைக் கொச்சைப்படுத்தியும், களங்கம் கற்பித்தும், கிருத்துவ மிஷினரிகளின் மீது பழி சுமத்தியும், வெளி நாட்டுப் பணம் போராட்டக்காரர்களுக்கு வருகிறது என்று அக்கிரமமான பொய்யைச் சொல்லியும், மத்திய அரசின் அமைச்சர்கள் நச்சுப்பிரச்சாரத்தைச் செய்து வந்தனர்.

போராட்டக்காரர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், மக்களின் அச்சம் நீங்கும் வரையில் அணுஉலை தொடங்க தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறிவந்த தமிழக முதலமைச்சர், அதிரடியாக அணுஉலைக்கு ஆதரவு தந்ததோடு, அறப்போராட்டக்காரர்களை மிரட்டுவதற்கு முனைந்து, காவல் துறையின் மூலம் அப்பட்டமான பொய்வழக்குகளைப் போடுவதோடு கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.

2011 ஆம் ஆண்டிலேயே போராட்டக்காரர்கள் மீது ஏராளமான பொய் வழக்கு களை தமிழக காவல்துறை பதிவு செய்துள்ளது. அதில் பெயர்களைக் குறிப்பிடாமல், அந்தக் குற்றங்களில் பலர் ஈடுபட்டதாகப் பொய் வழக்கைப் பதிவு செய்து இப்போது கைது செய்யப்படுகிறவர்களை அத்தகைய வழக்குகளில் சேர்த்துள்ளனர்.

நடைபெற்று வருகின்ற அறவழிப்போராட்டத்தைக் கொச்சைப் படுத்து வதற்கும், பொதுமக்கள் மத்தியில் இப்போராட்டம் குறித்து மிகத் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக காவல்துறை மேற்கொள்கின்ற இத்தகைய அராஜகப்போக்கு எதேச்சதிகார நடவடிக்கையின் விளைவாகும்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, கைதானவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                         வைகோ
சென்னை-8                                                                 பொதுச் செயலாளர்
24.03.2012                                                                         மறுமலர்ச்சி தி.மு.க.

1 comment:

  1. ஐயா எங்களுக்கு உணர்வாய் குரல் கொடுபவரகளில் நீங்கள் முக்கியமானவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்றால் நல்லகண்ணு ஐயாவிற்கு பின் உங்களைதான் எல்லோரும் சொல்கின்றனர். உண்மையும் அதுதான். இங்ஙனம் ஜோசப் ஈழ தமிழன்

    ReplyDelete